ராய்ப்பூர்: இந்திய வரலாற்றில் முதன்முறையாக சத்திஷ்கர் மாநிலத்தில் வாரத்தில் 5 நாள் வேலை! காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாட்டின் 73வது குடியரசு தினத்தில் அவர் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சத்திஷ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பூபேஷ் பாகல் தற்போது, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் அங்கு, தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் (காங்கிரஸ்) ஆட்சி அமைத்தால் எல்பிஜி சிலிண்டர் விலை (சமையல் எரிவாயு சிலிண்டர்) 500 ரூபாயை தாண்டாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், இன்று, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாள் வேலை என்று அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வேலை செய்யும் தினம் 4½ நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது.