ஓலிம்பியாட்டில் வெற்றிபெற்ற இந்திய செஸ் அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Must read

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், ஓலிம்பியாட்டில் வெற்றிபெற்ற இந்திய செஸ் அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகையைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணியினரிடம் வழங்கி பாராட்டினார்.

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது. தமிழக அரசு, சா்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) சாா்பில் ரூ.100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் ஃபோா் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. ஓபன் பிரிவில் 187, மகளிா் பிரிவில் 162 நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 11-ம் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்றன. ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான், ஆா்மீனியா, இந்திய பி அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றன.

மகளிா் பிரிவில் உக்ரைன், ஜாா்ஜியா, இந்திய ஏ அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றன.

இந்திய பி அணியில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்றிருந்தனா். இந்திய மகளிா் ஏ அணியில் நிறைமாத கா்ப்பிணி ஹரிகா, கொனேரு ஹம்பி, ஆா். வைஷாலி, பக்தி குல்கா்னி, தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனா்.

விளையாட்டு வீரா்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபா் பதக்கங்களில் இந்திய இளம் வீரா்கள் டி. குகேஷ், நிஹல் சரின் ஆகியோா் தங்கம் வென்றனா்.

ஏ அணி வீரா் அா்ஜுன் எரிகைசி வெள்ளியும் பி அணி வீரா் பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனா்.

மகளிா் பிரிவில் தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக், ஆா்.வைஷாலி ஆகியோர் வெண்கலம் வென்றனா்.

இதைத்தொடர்ந்து கடைசி நாள் (செவ்வாய்க்கிழமை) மாலை நேரு விளையாட்டரங்கில் நிறைவு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ஃபிடே தலைவா் அா்காடி வோா்கோவிச், துணைத் தலைவா் விஸ்வநாதன் ஆனந்த் போன்றோர் பரிசளித்தனா்

. சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் (ஓபன் பிரிவில் இந்தியா பி, மகளிர் பிரிவில் இந்தியா ஏ) தலா 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இன்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து, வெற்றிபெற்ற இந்திய இரு இந்திய செஸ் அணிகளுக்கும் தலா ரூ. 1 கோடி பரிசுத்தொகையை தலைமைச்செயலகத்தில் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிளிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

இதையடுத்து இன்று பிறந்தநாள் காணும் தமிழக செஸ்வீரர் பிரக்ஞானந்தா முதல்வரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். அவருக்கு முதல்வர் இனிப்பு வழங்கி பாராட்டினார்.

More articles

Latest article