சென்னை: செக் மோசடி வழக்கில், மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அவர் மேல்முறையீடு செய்யும் வகையில், அவரது தண்டனைஇரு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சதன் திருமலை குமார் மதிமுகவை சேர்ந்தவர் ஆவார். தனி தொகுதியான வாசுதேவநல்லூரில் மதிமுக சார்பில் 2021 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் சதன் திருமலைக்குமார் தான் செய்து வரும் தொழிலின் வளர்ச்சிக்காக, கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ லிங்க் ஓவர்சீஸ் பைனான்ஸ் என்று நிதி நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.
முதல் கட்டமாக 51 லட்ச ரூபாயும், இரண்டாம் கட்டமாக 80 லட்சம் என அவர் மொத்தம் 1.30 கோடி கடனாக பெற்றுள்ளார். இதன் பிறகு தான் வாங்கிய கடனில் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் தவணையை அவர் திருப்பி செலுத்தி வந்துள்ளார். மீதமுள்ள கடன் தொகைக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலா 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு காசோலைகளை நிதி நிறுவனத்திடம் சதன் திருமலை குமார் வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் அந்த காசோலையை நிதி நிறுவனம் வங்கியில் செலுத்திய போது அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது. இது தொடர்பாக அந்த நிதி நிறுவனம் சார்பில் , கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கானது எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
மூன்றாவது மெட்ரோபொலிட்டன் மேஜிஸ்திரேட் சுந்தரபாண்டியன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியிட்டார். அதன்படி எம்.எல்.ஏ சதன் குமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் அவர் வாங்கிய கடனில் ஒரு கோடி ரூபாயை இரண்டு மாதங்களுக்குள் நிதி நிறுவனத்திற்கு திருப்பி அளிக்க வேண்டும். இல்லையென்றால் மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படுவதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு குறித்து மேல்முறையோடு செய்வதற்காக 2 மாதங்கள் கால அவகாசமும் அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செக் மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.பி எம்.எல்.ஏக்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, சதன் திருமலை குமார் தனது எம்.எல்.ஏ பதவியை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் அவர் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
[youtube-feed feed=1]