சென்னை: சென்னையின் மொத்த வாக்காளர்கள் 28.30 லட்சம் ஆக குறைந்துள்ளது எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 11.74 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை இழந்த மாவட்டமாக சென்னை உருவெடுத்துள்ளது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் 84 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (SIR) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி 23ந்தேதி தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் இறுதிவாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி, மாநிலம் முழுவதும் தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடியாக உள்ளது. எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 11.74 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப்பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் ரிப்பன் மாளிகையில் வெளியிட்டார்.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தாருடைய பெயர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 4,079 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிகபட்ச மாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 192 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்படி நடைப்பெற்று முடிந்த சிறப்பு தீவிரத் திருத்தத்தின்படி, சென்னை மாவட்டத்தில் 13,65,763 ஆண் வாக்காளர்கள், 14,64,344 பெண் வாக்காளர்கள் மற்றும் 829 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 28,30,936 வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அக்.27-ம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது (எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பின்பு) , வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 11,73,758 லட்சம் நீக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, 2,51,260 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதி பட்டியலில் 1,27,418 ஆண் வாக்காளர்களும், 1,43,053 பெண் வாக்காளர்களும், 829 இதர வாக்காளர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு பிறகு, சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து நான்காயிரத்து 694 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 28 லட்சத்து 30 ஆயிரத்து 936 ஆக குறைந்தது. அதாவது சுமார் 3 பேரில் ஒருவர் என, மொத்தம் 11 லட்சத்து 73 ஆயிரத்து 758 வாக்காளர் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை இழந்த, முதன்மையான 5 சட்டமன்ற தொகுதிகளும் சென்னை மாவட்டத்திலேயே அமைந்துள்ளன.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வாக்காளர்களை இழந்த தொகுதியாக அண்ணா நகர் உள்ளது. தேர்தல் ஆணைய தரவுகளின்படி, 99 ஆயிரத்து 20 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பு இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் இருந்து, 35 சதவிகிதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் வேளச்சேரி தொகுதியில் இருந்து மட்டும், அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 829 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அண்ணா நகர் தொகுதியில், 99,020 வாக்காளர்கள் நீக்கம், ஆயிரம் விளக்கு தொகுதியில் 84,466 வாக்காளர்கள், முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் 83,402 வாக்காளர்களும், வில்லிவாக்கம் தொகுதியில் 80,702 வாக்காளர்களும், தியாகராய நகர் தொகுதியில் 80,554 வாக்காளர்களும் நீக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 2,22,792 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,16,896 வாக்காளர்களும் உள்ளனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் – 1,95,856, பெரம்பூர் – 2,22,792, கொளத்தூர் – 2,07,251, வில்லிவாக்கம் – 1,59,764, திருவிக நகர் 1,78,793, எழும்பூர் – 1,34,879, ராயபுரம் – 1,56,931, துறைமுகம் – 116896, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – 1,63,866, ஆயிரம் விளக்கு – 1,53,903, அண்ணா நகர் – 1,81,402, விருகம்பாக்கம் – 196536, சைதாப்பேட்டை – 2,00,697, தியாகராய நகர் – 1,54,943, மயிலாப்பூர் 1,94,731, வேளச்சேரி – 2,11,691 என மொத்தமாக 28,30,936 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல்கள் மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. இதை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களது பெயர் மற்றும் குடும்பத்தாரின் பெயர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே, சென்னையில் உள்ள பல தொகுதிகளில் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டன. அந்த குறிப்பிட்ட தொகுதிகளில் தற்போது பல ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குகள் போலி வாக்குகள் என கூறப்படும் நிலையில், நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என நம்பப்படுகிறது.
முதமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலிருந்து 83,402 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த தேர்தலின்போது அவரது வெற்றி வித்தியாசம் 70ஆயிரம் மட்டுமே எப்து குறிப்பிடத்தக்கது.
துணை முதலமைச்சர் உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதியிலிருந்து 76,201 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், அவரது வெற்றி வித்தியாசம்69 ஆயிரம் மட்டுமே.
அமைச்சர் சேகர்பாபுவின் துறைமுகம் தொகுதியிலிருந்து 63,445 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், அவரது வெற்றி வித்தியாசம் வெறும் 27ஆயிரம் மட்டுமே.
இதை கணக்கிட்டு பார்க்கும்போது, திமுக பெற்றுள்ள வெற்றிகள் முழுவதும் போலி வாக்காளர்கள் மூலமே என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
