சென்னை: சென்னையில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் தகிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும், என்றாலும், காற்றின் திசை மற்றும் வலு, காலநிலைக்கு ஏற்ப வெயிலின் தாக்கம் தொடர வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந்தேதி தொடங்கிய நிலையில், இடையில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததுடன், எதிர்பார்த்த வெப்பம் இல்லாமல், சாதாரணமே சூழலே நிலவியது. இந்த அக்னி நட்சத்திர வெயில் மே 28-ந் தேதி முடிவடைய உள்ள நிலையில், இனி வரும் நாட்கள் வெப்பம் தகிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடுமையான வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், மே மாதத்தில் தொடரும் எனவும், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதியில் வெயில் இயல்பை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
மழைக்கான வாய்ப்பு குறையும் வேளையில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது கிழக்கு திசையில் இருந்து தமிழ்நாடு நிலபரப்பிற்குள் வரும் காற்று போதிய வலுவில்லாததால், உணர்வெப்பம் அதிகரித்து, வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இதன் காரணமாக வெப்பநிலையில் இயல்பை விட 1℃ -2℃ வரை வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளது. இன்னும் இரண்டு தினங்களுக்கு இதே நிலை தொடரும் என்பதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.