சென்னை: மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்.

சேலம், நீலகிரி, தர்மபுரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரக்கூடிய 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், சிவகங்கை, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், வேலூர், சேலம், தர்மபுரி, விருதுநகர், மதுரை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை,  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும்,  சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம்  மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

வெப்பநிலையானது அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்.  24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை, கோத்தகிரியில் 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.