சென்னை: தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் 16,000 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறுகிய நேரத்தில் அதிகனமழை பெய்ததே சில இடங்களில் தண்ணீர் தேங்க காரணம் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடர் மற்றும் கனமழையின் காரணமாக, பணி முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். நகரின் பல பகுதியில் 10 செ.மீ வரை மழை பதிவானது. சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, 100-அடி சாலை, போரூர் புறவழிச்சாலை, அண்ணா நகர் நிழற்சாலை, ஈவேரா பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர், ஆவடி, திருமங்கலம், புதிய ஆவடி சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் எற்பட்டது.
குறிப்பாக, புறநகர் பகுதிகளான புழல், செங்குன்றம், மாதவரம், சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மழைநீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நின்றதால், குடியிருப்பு பகுதி மக்கள் வேதனை அடைந்தனர். , வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். நகரின் பல தாழ்வன பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் பழுதாகி நின்றன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என்று கூறியதுடன், மேற்கு மாம்பலம், தியாகராயர் நகரில் பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சனையே மழை நீர் தேங்க காரணம் என்றவர், மாம்பலம் கால்வாயில் இருந்து செல்லும் தண்ணீர் அடையாறில் கலந்துதான் கடலுக்கு செல்லும். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அடையாறில் அதிகமாக வருவதால் மாம்பலம் கால்வாய் தண்ணீர் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், சென்னையில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக 57 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் மழை தொடர்பான கட்டணமில்லா புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு குறித்து 1913, மற்றும் 04425619204, 04425619206 மற்றும் வாட்ஸ்அப் +91 94454 7720 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் புகார்கள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
ரூ.4ஆயிரம் கோடி ஸ்வாஹா? வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை! பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம்..