தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் திருவல்லிக்கேணி, சென்னை.
சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது.
மூலவர்: தீர்த்தபாலீஸ்வரர்
தாயார்: மகாதிரிபுரசுந்தரி
தல விருட்சம் : வன்னி மரம்
தீர்த்தம் : கடல் தீர்த்தம்.
தொன்மை : 1000 ஆண்டுகள்.
மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம்.கயிலையில் சிவன் திருமணம் நடந்தபோது, உலகைச் சமநிலைப்படுத்த அகத்தியர் பொதிகை மலைக்குச் சென்றார். வழியில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தடியில் அமர்ந்து சிவபெருமானைத் தியானித்தார். அவருக்குக் காட்சிதந்த சிவன், வங்கப்பெருங்கடலில் நீராடி அதன் தீர்த்தத்தால் தன்னை அபிஷேகம் செய்து வணங்கிட நோய் தீரும் என்றார்.
அகத்தியரும் அவ்வாறே செய்து நோய் நீங்கப்பெற்றார். அகத்தியரின் நோயைத் தீர்த்ததாலும் இத்தலத்து இறைவர் தீர்த்தபாலீஸ்வரர் என அழைக்கப்படுவதாகக் கூறப்படுவதுண்டு.
அகத்தியர் குள்ள முனிவர் என்பதால், அவர் தன்னை மலர்களால் பூஜை செய்யும் போது, தன் உயரத்தையும் குறைத்துக் கொண்டாராம் சிவன். அதன் காரணமாகவே அவர் உயரம் குறைவாக இருக்கிறார்
இத்தலத்து அம்பாளும் இரண்டடி உயரத்தில் மிகவும் சிறிய உருவமாக உள்ளார்
இத்தலத்து இறைவனுக்கு, அகத்தீஸ்வரர், சர்வேஸ்வரர், நோய்தீர்த்தபிரான் என இவருக்குப் பலபெயர்கள் உள்ளன. மாசிமாதம் மகாசிவராத்திரி தினத்தன்று மட்டும் சூரியன் தனது ஒளியைச் சுவாமியின் மீது பரப்பிப் பூஜைசெய்வது சிறப்பு. இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயில் இறைவனைத் திங்கள் கிழமைகளில் வணங்க, எல்லா நன்மைகளும் ஏற்படும்.
இங்குள்ள பிரகாரத்தில் சிதம்பர விநாயகர் தனி சன்னதியில் இருக்கிறார். இவரைச் சுற்றிலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் வகுப்பை எழுதி வைத்துள்ளனர். இவரை “பாஸாக்கும் கணபதி” என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.
சுற்றுப்பிரகாரத்தில் அரச மரத்தின் கீழ் உள்ள சிவன் மற்றும் நாகருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.