சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 22ந்தேதி விசாரணையின்போது, நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த சில விசாரணைகளின்போது, செந்தில் பாலாஜி காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த விசாரணையின்போது நேரில் அழைத்து வர நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 9 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். அவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்தபடியே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும் அவருக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இjற்கிடையில்,சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 28-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதற்கிடையில், செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்து, இந்த வழக்கில் தன்னை மீண்டும் வாதிட அனுமதிக்கக்கோரி செந்தில் பாலாஜி கோரிக்கை வைக்கப்பட்டது. செய்யப்பட்டது. அவரது மனுவில் , ”இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை வழங்குமாறு வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த ஆவணங்கள் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆவணங்கள் கிடைத்த பிறகு, அதன் அடிப்படையில் இந்த வழக்கில் வாதிட அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதிக்காவிட்டால், எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்”, என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதமன்” வங்கியில் இருந்து வழங்கப்பட்ட ஆவணங்களில் வேறுபாடுகள் இருக்கிறது” என வாதிட்டார்.
பிறகு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழங்கறிஞர் என்.ரமேஷ் ”வங்கி ஆவணங்கள் குறித்து செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்புடையது இல்லை. ஆகையால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்”, என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, மீண்டும் வாதிட அனுமதி கோரும் செந்தில் பாலாஜி மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 17-ம் தேதி அளிக்கப்படும் என உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று (17ந்தேதி) மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கில் அசல் ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்காக செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22-ம் தேத(திங்கட்கிழமை) பிற்பகல் ஆஜர் படுத்த வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.