சென்னை: தலைநகர் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று கொட்டி தீர்த்த மழை காரணமாக, சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமானது. இதையொட்டி, ஏரியில் இருந்து 2ஆயிரம் கனஅடிநீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று சுமார் 6 மணி நேரம் முதல் 8மணி நேரம் வரை விட்டு விட்டு பெய்த கனமழை காரணமாக  சென்னை நகர் முழுவதும் மழை வெள்ளம் ஆறாக ஓடி, மாநகரமே ஸ்தம்பித்து விட்டது. நேற்று ஒரேநாளில் 21 செமீ கனமழை பெய்தாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், சென்னையில் உள்ள பிரதான சுரங்க பாதைகள் அனைத்தும் மழைநீரால் சூழப்பட்டு, கடுமையான போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தின.  சென்னை டிஜிபி அலுவலகம் அமைந்துள்ள மெரினாகடற்பகுதியில் 24 சென்டிமீட்டர்,  நுங்கம்பாக்கத்தில் 21சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.  சென்னையில் இரண்டு இடங்களில் அதி கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதையடுத்து, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்கள், அத்தியாவசியப் பணிகள் தவிர்த்த அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ள பகுதியில் 19 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.  இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 2,200 கன அடி நீர் வரும் நிலையில் ஏரியில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.