சென்னை:
ஜெயா தொலைகாட்சி செய்தி ஒளிபரப்பை தடுப்பது ஜனநாயக விரோதம் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச்செயலாளர் பாரதிதமிழன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“இன்று 09.11.2017 வியாழன் காலை முதல் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு ஜெயா தொலைக்காட்சி ஊழியர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஜெயா தொலைக்காட்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் நடைபெறும் வருமான வரி சோதனைகள் குறித்து ஜெயா ப்ளஸ் செய்தி சேனல் செய்தி ஒலிபரப்பி வருகிறது.
ஆனால் வருமான வரித் துறை சோதனை தொடர்பாக எந்த செய்தியும் வெளியிடக் கூடாது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயா செய்தி குழுவினரை மிரட்டி வருவதாக , அங்குள்ள ஜெயா தொலைக்காட்சி செய்தி குழுவினர் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனடியாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது ஊடகங்களின் அடிப்படை கடமை. ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் செய்தி, வருமான வரித் துறை அதிகாரிகளின் பணிகளுக்கு எந்த விதத்திலும் இடையூறாக அமையாத நிலையில், வருமான வரி சோதனை தொடர்பாக செய்தி வெளியிடக் கூடாது என்று மிரட்டுவதை, பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் ஒரு செயலாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.
இந்த மிரட்டல் போக்கையும் , கருத்து சுதந்திரத்துக்கு எதிரான ஏதேச்சதிகார போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
வருமான வரித் துறையின் மூத்த அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, உடனடியாக சோதனை நடத்தும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது” – இவ்வாறு பாரதி தமிழன் தெரிவித்துள்ளார்.