சென்னை
பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் சென்னை போட் கிளப் சாலைக்குள் வெளியாட்கள் வரத் தடை விதிக்குமாறு காவல்துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னையில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வசிக்கும் சாலை சென்னை போட் கிளப் சாலையாகும். இந்த சாலையில் மிகப் பெரிய செல்வந்தர்களான பிசிசிஐ முன்னாள் தலைவர் மற்றும் தொழிலதிபரான என் சீனிவாசன், டிவிஸ் குழும அதிபர்கள், சன் டிவி அதிபர் கலாநிதி மாறன், மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், டிடிகே, முருகப்பா, மற்றும் எம் ஆர் எஃப் குழும அதிபர்கள் என பெரும்புள்ளிகள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள சாலைகள் நன்கு பராமரிப்பில் உள்ளன. எஅன்வே அக்கம்பக்கத்தில் உள்ளோர் பலரும் இங்கு தங்கள் தினசரி நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சியை இங்கு மேற்கொள்வது வழக்கமாகும். தற்போது கொரோனா அச்சம் நிலவுவதால் இங்கு வசிப்போர் யாரும் வீட்டை விட்டே வருவதில்லை என்பதால் சாலைகள் காலியாக உள்ளன. எனவே பலரும் இங்கு நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதி வாசிகளின் சங்கம் கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று சென்னை காவல்துறை ஆணையருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. சங்கத் தலைவர் ரவி அப்பாசாமி கையெழுத்து இட்டுள்ள இந்த கடிதத்தில், ”ஊரடங்கு நேரத்தில் இங்கு வசிக்காத பலரும் தங்கள் நடை மற்றும் ஓட்டப் பயிற்சிகளை இங்கு வந்து செய்கின்றனர். அறிமுகமற்றோரின் வாகனங்கள் காணப்படுகின்றன
மேலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் வேளையில் இவ்வாறு இவர்கள் எங்கள் பகுதியில் பயிற்சிகள் செய்வது மிகவும் தவறானதாகும். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வந்திருக்கவும் வாய்ப்புள்ளது. இது சமூக இடைவெளிக்கு எதிரானது. எனவே இந்த சாலை நுழைவாயிலில் ஒரு பெரிய கேட் அமைத்து சாலைக்குள் வெளியாட்கள் வருவதைத் தடை செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது நகரில் உள்ள பல ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இது குறித்து வழக்கறிஞர் ரமேஷ், “இந்த கோரிக்கை சட்ட விரோதமானது. மக்களை இந்த பகுதிக்குள் நடமாட விடாமல் தடுக்க இவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இந்த சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கானது. இதில் அவர்களுடைய மேல் தட்டு மனப்பான்மையைக் காட்டக்கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆர்வலர் ராதிகா கணேஷ், “கொரோனா பாதிப்பு எவ்வாறு பொருளாதார வேறுபாட்டில் விளையாடுகிறது என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. இது பல வருடங்களாகப் போராடிப் பெற்ற சமூக நீதிக்கு எதிரானது. முன்பு ஆதிக்க வாதிகளால் நடத்தப்பட்ட அடக்குதல் தற்போது பணம் படைத்தோர் மற்றும் நகரவாசிகளால் நடத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ஆர்வலரான சுரேஷ், ”பொது இடங்களில் மக்கள் நடமாடுவதைத் தடுத்து கேட்கள் அமைப்பது சட்டத்துக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல்துறை வட்டாரங்கள் தங்களுக்கு இவ்வாறு போட் கிளப் ரோடில் வசிப்போர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஆனால் சாலைகளை பயன்படுத்துவது பொது மக்களின் அடிப்படை உரிமை என்பதால் இது போலக் கோரிக்கைகள் ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளன.