சென்னை
அரசை எதிர்பாராமல் சென்னை வாழ் மக்களே தங்கள் பகுதியில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
சென்னை நகரில் உள்ள ஏரிகளில் பல குப்பை மேடாகி உள்ளன. பிளாஸ்டிக் பைகளும் பாட்டிலும் நீருக்கு மேல் மிதந்து நீர் இருப்பதே தெரியாத அளவுக்கு நிலைமை உள்ளது. ஏற்கனவே நீர் நிலைகள் முழுமையாக வற்றி உள்ளன. இந்நிலையில் வரும் பருவ மழையின் போது மழைநீரை சேகரிக்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்காமல் உள்ளது. குறிப்பாக இந்த எரிகளை சுத்தம் செய்யும் முயற்சி நடப்பதே இல்லை.
இதை ஒட்டி சென்னை மக்கள் தாங்களே ஏரிகளை சுத்தம் செய்யும் பணியை தொடங்க எண்ணினர். சிட்லப்பக்கம் மற்றும் மணப்பாக்கம் பகுதிகளில் உள்ள ஏரிகள் சுத்தம் செய்யும் பணி முதலில் தொடங்கியது. மக்கள் அனைவரும் கடப்பாறை மற்றும் மண் வெட்டி ஆகியவைகளை தங்கள் சொந்த செலவில் வாங்கினார்கள். அத்துடன் மற்றொரு பிரிவினர் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை சேகரிக்க பைகளை எடுத்து வந்தனர்.
ஒருவர் மண்ணை வெட்டவும் மற்றவர் அதை கரையில் கொட்டவுமாக குழுக்கள் பல சேர்ந்து சுத்தம் செய்தனர். பிளாஸ்டிக் கவர் மற்றும் பாட்டில்கள் அகற்றப்பட்டு அவற்றை அங்கிருந்து களைந்து மாநகராட்சி குப்பை கிடங்கில் ஒர் அணி சேர்த்தது. இந்த சுத்திகரிப்பு பணியை அறிந்த அரசு உடனடியாக இங்கு தூர் வாரும் பணிக்காக இயந்திரங்களை கொண்டு வந்துள்ளது. விரைவில் பணி தொடங்க உள்ளது.
இதை அறிந்த வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்ய தொடங்கி உள்ளனர். இதற்காக அவர்கள் சிட்லபாக்கம் மற்றும்மணப்பாக்கம் பகுதி மக்களின் ஆலோசனைகளை கேட்டுள்ளனர். அத்துடன் இந்த இடம் அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அரசிடம் அனுமதி கேட்டு மனு செய்துள்ளனர்.