அறப்போர் இயக்கத்தின் ஊழல் வீடியோ எதிரொலி: 74 டெண்டர்களையும் ரத்துசெய்த சென்னை குடிநீர் வாரியம்

சென்னை:

சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம், தமிழகத்தில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் பராமரிப்பு தொடர்பாக மேற்கொண்ட டெண்டரை திடீரென ரத்து செய்துள்ளது. ஏற்கனவே இந்த டெண்டரில் ஊழல் நடைபெறுவதாக அறப்போர் இயக்கம் கடந்த இரண்ட மாதங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 74 டெண்டர்களையும் கேன்சல் செய்து சென்னை குடிநீர் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் சார்பில், கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷன் பராமரிப்பு சம்பந்தமாக டெண்டர் கோரப்பட்டது. இதற்கு 74 நிறுவனங்கள் டெண்டர் கோரியிருந்தன.

இந்த நிலையில், அறப்போர் இயக்கம் சார்பில் டெண்டர்கள் இறுதி  செய்யப்படுவதில் ஊழல் நடைபெறுவதாக கடந்த பிப்ரவரி மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

அதுகுறித்து தெரிவித்த அறப்போர் இயக்க நிர்வாகி,  சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷன் பராமரிப்பு சம்பந்தமாக 74 டெண்டர்கள் முடிவுக்கு வந்தாகவும், இந்த டெண்டர்கள் பெரும்பாலும் செட்டிங் செய்யப்படுவதாகவும் இது அனைத்தும் அசோகா ஹோட்டல் ரூம் No 401 ல் நடப்பதாகவும் புகார் வந்தது. வேறு யார் டெண்டர் போட வந்தாலும் மெட்ரோ வாட்டர் தலைமை அலுவலகம் நான்காவது மாடியில் குண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வும் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்றும் புகார் வந்தது.

எனவே இன்று நாமே டெண்டர் போடுவது போல் கவர் எடுத்து சென்று போன போது என்ன நடந்தது என்பதை வீடியோவில் காணலாம் என்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.

அதில்  பலர் நுழைவாயிலில் நின்று அசோகா ஹோட்டல் சென்று பார்க்க சொல்லுகிறார்கள். எல்லா டெண்டரும் மந்திரி மூலமாக செட்டப் செய்யப்பட்டது என்பது குறித்து பேசிய தகவல் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த டெண்டருக்கும் அமைச்சர் வேலுமணிக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில்,மெட்ரோ வாட்டர்  74 டெண்டர்களையும் ரத்து செய்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: cancels 74 tenders, Chennai Metro Water, NGO exposes corruption
-=-