சென்னை: ஓட்டுநர் இல்லா ரயில் தயாரிக்க ரூ.269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில், சென்னையில் செயல்படுத்தப்பட உள்ள பேஸ்-2 வழித்தடத்தில் செயல்பாட்டு வரும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் அடுத்த 28 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத ஸ்மார்ட் மெட்ரோ ரயிலை பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு டிசம்ப 29ந்தி தொடங்கி வைத்தார், தேசிய தலைநகர் டெல்லியில், மின் இயக்கத்தைத் தூண்டும் மற்றொரு நடவடிக்கையாக, டெல்லி மெட்ரோவின் மெஜந்தா லைனில் இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது, ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது தனது அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், புதிய ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான மற்றொரு படி என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அதன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 10 செட் ஓட்டுநர் இல்லாத ரயில்களை வாங்குவதற்கு பிரெஞ்சு பன்னாட்டு ரோலிங் ஸ்டாக் உற்பத்தியாளரான அல்ஸ்டாமுடன் 269 கோடி ரூபாய் மதிப்பிலான துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 இன் கீழ், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ₹946 கோடியே 92 லட்சம் மதிப்பில், கடந்த ஆண்டு 2022, நவம்பர் 17ம் தேதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவ.27ம் தேதி) துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரயில்கள் என மொத்தம் 36 மெட்ரோ ரயில்களை வழங்கும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ₹269 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்ததத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ ரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் ஆகியவையும் ஒப்பந்தத்தில் அடங்கும்.
இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ ரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம்4-ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன், உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.