சென்னை: “சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது” என முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்த திட்டதில், சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சென்னையில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதி களில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கான அம்சங்கள் இடம்பெறும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மிக்ஜாம் புயல் பாதிப்பு, அரசியல் நிலவரம், கவர்னர் விவகாரம் உள்பட பல்வேறு கேள்வி களுக்கு பரபரப்பான பதில்களை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பெய்த மிக்ஜாம் புயல் மழை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறியவர், வரும் காலத்தில் சென்னையில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு பதவி ஏற்றதும், சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.400 கோடி செலவில் மழைநீர்வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பணிகள் 98 சதவிகிதம் முடிந்து விட்டதாக கூறிய நிலையில், வெள்ளப்பாதிப்பைத் தொடர்ந்து பணிகள் இன்னும் முடியவில்லை என அமைச்சர் நேரு பல்டியடித்தார்.
முன்னதாக சென்னை தேனாம்பேட்டையில் 2022ம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை பெருநகரத்திற்கான மூன்றாம் முழுமை திட்டம் (2027-2046) தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் திட்டத்திற்கான தொடக்க கூட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர், திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அதில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், சென்னை மாநகராட்சியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி சென்னை உடன் அரக்கோணம், அச்சரபாக்கம் போன்ற பகுதிகள் சேர்க்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூன்றாவது சென்னை முழுமை திட்டம் (3rd master plan), தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
1975ஆம் ஆண்டு 174 சதுர கி.மீட்டராக இருந்த சென்னை மாநகராட்சி 2011 ஆம் ஆண்டு விரிவாக்கத்தில் 426 சதுர கி.மீட்டராக விரிவடைந்தது. சென்னைக்கான இரண்டாவது முழுமை திட்டத்தில், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் சென்னைக்குள் கொண்டுவரப்பட்டன. சென்னை மெட்ரோ பாலிடன் பகுதியின் 1,189 சதுர கி.மீட்டராக விரிவடைந்தது.
பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டிலேயே, 1,189 சதுர கி.மீட்டராக இருந்த சென்னை மெட்ரோபாலிடன் பகுதியின் மொத்த பரப்பளவை 8,878 சதுர கி.மீட்டராக விரிவுபடுத்தும் திட்டம் குறித்த ஆலோசனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து சென்னையை விரிவுபடுத்துவது குறித்து மூன்றாவது முழுமை திட்டம் தொடர்ந்து பேசி முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி, நகரில் ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
தற்போது தமிழ்நாடு அரசு தயாரித்து வரும் சென்னை மாஸ்டர் பிளான்3, வரும் 2046ம் ஆண்டுதான் செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தற்போது புயல் வெள்ளம் குறித்து பேட்டி அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் (Third Master Plan) தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த முழுமைத் திட்டத்தில் வெள்ளத் தடுப்பிற்கான திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள் அது வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையின் மையப்பகுதியான வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகள் பெருவெள்ளத்தில் தத்தளித்த நிலையில், அதுகுறித்து கூறிய முதலமைச்சர், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாகவும், நீர் வடிந்து தேங்காமல் இருப்பதற்கு இயற்கையால் உருவான அந்த நிலத்தை முழுவதுமாக மீட்டு பாதுகாப்பது மிகமிக அவசியமானதாகும் என்றார்.
மேலும், தென் சென்னை பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பங்கு மிகவும் இன்றியமையாத தாகும் என்றவர், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பயன்பாடு குறித்து நிச்சயமாக மறு ஆய்வு செய்யப்படும். இந்த சதுப்புநிலத்தைப் பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும், வனத்துறை ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறது.அதேபோல், சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் (Third Master Plan) தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த முழுமைத் திட்டத்தில் வெள்ளத் தடுப்பிற்கான திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள் அது வெளியிடப்படும் என்றார்.
இந்த மூன்றாவது முழுமைத் திட்டத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சென்னையில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கான அம்சங்கள் இடம்பெறும். சென்னையையும், அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளையும், சதுப்புநிலங்களையும் மேம்படுத்தி, வெள்ள பாதிப்புகளைக் குறைத்து, ஒரு நிலைக்கத்தக்கத் திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வதற்கு இந்த மூன்றாவது முழுமைத் திட்டம் நிச்சயம் வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தின்படி, சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளும் தண்ணீர் வடியும் பாதைகளும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று உறுதி கூறியவர், “ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு எப்போதும் முனைப்புடன் உள்ளது. எவ்வித ஆக்கிரமிப்பாக இருந்தாலும், அவை அகற்றப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றார்.
மேலும், நீர்நிலைகளையும், வெள்ளச் சமவெளிகளையும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் இருந்து காக்க வேண்டும். அத்தகைய நீர்நிலைகளைச் சுத்தம் செய்து அகலப்படுத்த வேண்டும்.அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 2021 முதல் நவம்பர் 2023 வரை நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 350 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 475.85 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. அதே போன்று, நீர்வள ஆதாரத் துறைக்குச் சொந்தமான ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட பகுதிகளில் 19,876 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 220.45 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன” என்று கூறினார்.
சென்னை மாஸ்டர் பிளான்3 2046ம் ஆண்டுதான் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதலமைச்சரின் பதிலை பார்க்கும்போது, அதுவரை சென்னை வெள்ளத்தில்தான் மிதக்கும்போல தெரிகிறது.