சென்னை:
சென்னையில் மாரத்தான் போட்டிகள் நேப்பியர் பாலத்தில் தொடங்கியுள்ளன. இந்த போட்டியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகள் சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாரத்தானின் 11 ஆவது பதிப்பு இன்று தொடங்கியது. முழு மாரத்தான் (42 கி.மீ.), பெர்ஃபெக்ட் மைலர் (32 கி.மீ. ), அரை மாரத்தான் 21 கி.மீ. மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ 20 லட்சமாகும். முதல்முறையாக இந்த போட்டியில் பார்வை குறைபாடுள்ள 30 வீரர்கள், 50 பிளேடு ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் 50 சக்கர நாற்காலிகள் ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டிகள் சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கியது. இதில் 10 கிமீ. ஓட்டம் மட்டும் தரமணி சிபிடி மைதானத்தில் முடிவடைகிறது. மற்ற 3 பிரிவுகளின் பந்தயங்களும் ஈசிஆர் சாலையில் உள்ள உத்தண்டி இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் முடிவடைகிறது. இந்த போட்டிகளில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அது போல் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவும் இந்த போட்டியில் கலந்து கொண்டார்.