சென்னை

சென்னை ஐஐடியில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடியில் சிவில் எஞ்சினியரிங் துறையில் பேராசிரியராக மாதவகுமார் என்பவர் பணி புரிந்து வந்தார்.  இவருக்குக் கீழ் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்ய ஒரு மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவியிடம் அடிக்கடி பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.  பாடத்தைக் கெடுத்துக் கொள்ள விரும்பாத அந்த மாணவி இதைச் சகித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் பேராசிரியரின் தொந்தரவு நாளுக்கு நாள் எல்லை மீறி உள்ளது.  கொரோனா பொது முடக்க சமயத்தில் வகுப்புக்கள் நிறுத்தப்பட்டன.  அதை பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர் பாட சந்தேகங்களை தெளிவு செய்யத் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.  அதற்கு மாணவி ஒப்புக் கொள்ளாததால் தமது வீட்டுக்கு வந்து சமைத்துக் கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்தித்துள்ளார்.

பேராசிரியரின் தொந்தரவைத் தாங்க முடியாத அந்த மாணவி புகார் அளித்துள்ளார்.  அதன் அடிப்படையில் பேராசிரியை ஹேமா மூர்த்தி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு விசாரணை நடத்தி உள்ளது.   அந்த விசாரணை முடிவில் அவரை பேராசிரியர் பதவியில் இருந்து பதவி  இறக்கம் செய்யப்பட்டு இப்போது துணைப் பேராசிரியர் ஆக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து விசாரணைக்குழு, “எங்கள் குழு இரு தரப்பிலும் விசாரித்ததில் பேராசிரியர் மாதவ குமார் இந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி ஆனது.  எனவே அவர் துணைப் பேராசிரியராகப் பதவி இறக்கம் செய்யப்பட்டு 2 வருடங்களுக்கு முனைவர் பட்ட மாணவர்களுக்கும் 5 வருடங்கள் மற்ற மாணவர்களுக்கும் பாடம் எடுக்கத் தடை விதித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.

மதிப்புக்குரிய பேராசிரியரே தனது மாணவியிடம் இவ்வாறு நடந்துக் கொண்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.