சென்னை: ஜாதி வாரியாக கணக்கெடுப்பு கோரிய தொடரப்பட்ட வழக்கு குறித்து, காட்டமாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாமக நடத்திய இடஒதுக்கீடு போராட்டத்தை மறைமுகமாக சாடினர்.
சென்னை வன்னியகுல சத்ரிய மகாஜன சங்கம் சார்பில் அதன் பொருளாளரும், வழக்கறிஞருமான ஆர்.ஆனந்தபாபு, ஜாதி வாரியாக கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், 2021-ம் ஆண்டு நடத்த உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதி வாரியாக நடத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இடஒதுக்கீடு நடைமுறையை முழுமையாக அமல்படுத்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியமானது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர்கள், தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டங்கள் நடத்தி வருவதாக குறிப்பிட்டவர், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.
ஜாதி ரீதியிலான சில அமைப்புகளால்தான் தமிழகத்தில்போராட்டங்கள் நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், போராட்டங்களால் எதையும் அடைய முடியாது என்றும் தெரிவித்ததுடன், சாதியில்லா சமுதாயத்தை நோக்கி பயணிக்கும் போது சாதி வாரி கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பினர்.
சாதிவாரியாக புள்ளிவிவரங்களை சேகரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழகஅரசு ஆணையம் அமைத்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்திய அரசியல் சாசனத்தின்படி, மனுவில் கோரியுள்ள கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பாமக சார்பில் வன்னியர்களுக்கு 20சதவிகித இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தின்போது வன்முறைகளை தாண்டவமாடியது. இது தமிழக மக்களிடையே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. மேலும் ஒவ்வொரு சாதியினரும் இதுபோல, இடஒதுக்கீடு கோரி போராடினால், தமிழகத்தில் இருக்கும் சாதிகளுக்கு ஆளுக்கு ஒரு சதவிகிதம் கூட இடஒதுக்கீடு கொடுக்க முடியாத நிலையே உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.