சென்னை :
சேலம் மாவட்டம் கட்சராயன் ஏரியை பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதியளித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சிராபாளையத்தில் உள்ள ஏரியை திமுகவினர் தூர்வாரினர். இந்த ஏரியை பார்க்கச் சென்ற ஸ்டாலினை காவல்துறை தடுத்தது.
காவல்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் ஏரிகளைத் தூர்வாரும் பணியில் ஈடுபடும் திமுகவினரை அரசு தடுக்கக் கூடாது என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, ஸ்டாலின் ஏரியை பார்வையிடுவதால் அரசுக்கு என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பி இருந்தது.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த அரசு, ஸ்டாலின் அந்த பகுதிக்கு வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், அதன் காரணமாகவே ஸ்டாலின் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியது.
இதையடுத்து இன்றைய விசாரணையின்போது, கட்சராயன் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. அவருடன் மேலும் 25 பேர் சென்று ஏரியை பார்வையிடலாம் எனவும் கூறி உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி ஸ்டாலினை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.ஏரியை ஸ்டாலின் பார்க்கக்கூடாது என்று அரசு சொல்வது சட்ட விரோதம் என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.