சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி எடப்பாடி தலைமையிலான அரசு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 25ம் தேதி அரசாணை வெளியிட்டது. அதன்படி,  அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  அரசாணையை ரத்து செய்யக் கோரியும், திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், அரசு ஊழியர்களின்  ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை, கூடுதல் செலவினம் குறித்து விளக்கவில்லை என்றும் , அதனால் தமிழகஅரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த  மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தது.