டெல்லி: தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக சத்யகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட கிரிஜா வைத்தியநாதனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன்,  நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, கிரிஜா அந்த பதவியை வேண்டாம் என மத்தியஅரசுக்கு கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து,  தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக சத்யகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் தமிழக தலைமைச்செயலாளரான கிரிஜா தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள்’ என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது, கிரிஜாவுக்கு விதிகளின்படி போதிய அனுபவம் இல்லை என்று வாதிடப்பட்டது. முதலில் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகளும், கிரிஜா நியமனம் சரியல்ல என கருத்து தெரிவித்தனர்.ஆனால்,  இறுதி தீர்ப்பில், கிரிஜா வைத்தியநாதனை நியமித்தது செல்லும் என்றும்,  பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தகுதி உள்ளது.அவர் தனது பணிக்காலத்தில் பிளாஸ்டிக் தடை கண்காணிப்பு, மருத்துவக் கழிவு மேலாண்மை போன்ற  பல்வேறு குழுக்களின் தலைவராக பணியாற்றிய அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தற்போது,  தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனின் நியமனம் சரிதான் என தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தில் தீர்ப்பும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதன் காரணமாக, கிரிஜா வைத்தியநாதன், அந்த பதவியை ஏற்க மறுத்து மத்தியஅரசுக்கு கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து, தற்போது சத்யகோபால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சத்யகோபால், தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.