சென்னை: திமுக தலைவரும், மறைந்த மாநில முதல்வருமான மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மீதான கோயில்  நிலஅபகரிப்பு வழதக்கு மதுரையில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இதனருகே உள்ள விநாயகர் கோயில் நிலத்தை கல்லூரி நிர்வாகம் அபகரித்ததாக, மு.க.அழகிரி உள்ளிட்டவர்கள் மீது கோயில் நிர்வாக அதிகாரியும், தக்காருமான ஆர்.ஜெயராமன் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மு.க.அழகிரி, சம்பத்குமார், ஆதிலெட்சுமி, சேதுராமன், சதீஷ்குமார், கோயில் பூசாரிகளான ராமசாமி, வேலுச்சாமி ஆகிய 7 பேர் மீது நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இது தொடர்பான வழக்கு,  2019 ஆம் ஆண்டு  முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி (2021)  மாதம் இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து,  மு.க. அழகிரி மீது பதியபட்ட  (இந்திய தண்டனை சட்டம் பிரிவு 465, 468, 471 )  சில பிரிவுகள் பொருந்தாது எனவும்,  அந்த பிரிவுகளில் இருந்து  விடுவித்து மாவட்ட  நீதிபதி உத்தரவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து,   மதுரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.   அதில்,  இந்திய தண்டனை சட்டம் பிரிவு 465, 468, 471 கீழ் வழக்கு பதிவு செய்ததில் முகாந்திரம் இல்லை என இந்த வழக்கில் இருந்து மு.க. அழகிரி விடுவிக்கப்பட்டு உள்ளார்.  இது ஏற்புடையது இல்லை.  குற்றப்பத்திரிக்கையில் தெளிவாக  கூறப்பட்டு உள்ளது. எனவே மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி,  நில அபகரிப்பு வழக்கில் இருந்து மு.க.அழகிரியை விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறி உள்ளது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி கிருஷ்ண வள்ளி முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர் .

இந்த நிலையில்,  மு.க. அழகிரி மீதான நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்ககப்பட்டு உள்ளது.