சென்னை: ஒரு பாலின உறவு குறித்த நல்ல புரிதலைப் பெறுவதற்கு, ஒரு உளவியல் நிபுணருடனான தனது சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
அவர், தற்போது பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் தொடர்பான ஒரு வழக்கை விசாரித்து வருகிறார். ஒரு லெஸ்பியன் இணை, தங்கள் பெற்றோர்களிடமிருந்து தமக்குப் பாதுகாப்பு வேண்டுமென தாக்கல் செய்த மனுவை இவர் விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, ஒரு பாலின உறவு குறித்து தனக்கு முழுமையான புரிதல் இல்லையென்றும்; எனவே, அதுகுறித்து விரிவானதொரு புரிதலைப் பெறுவதற்கு, தான், உளவியல் நிபுணர் ஒருவரை சந்தித்து தெளிவுபெற வேண்டுமெனவும் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நீதிபதி, அத்தகையதொரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த வழக்கு, மிக நுட்பமாகவும், இரக்க உணர்வுடனும் கையாளப்பட வேண்டிய ஒன்று என்றும், ஒரு பாலின உறவு தொடர்பாக, தான் ஏற்கனவே கொண்டிருக்கும் கருத்தாக்கத்திலிருந்து வெளியேற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஒரு சிக்கலான வழக்கு தொடர்பாக, இப்படி வெளிப்படையாக அறிவித்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட பெண்களில் பெற்றோர்களும், இதுதொடர்பான கவுன்சிலிங் வகுப்பில் கலந்துகொள்ளும்படி, நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.