50,000 அபராதம்.. அதிர்ச்சி வைத்தியம் செய்த சென்னை உயர்நீதி மன்றம்.

தருமபுரியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.  ஆனால் அவருக்கு சாதிச்சான்றிதழை வழங்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.  மாநில அளவிலான ஆய்வுக்குழுவின் பரிந்துரைக்குப் பின்னும் இவருக்கு சாதிச்சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுத்த சூழ்நிலையில் வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாடியுள்ளார் “குறிச்சான்” எனும் பழங்குடியின சாதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி.

வழக்கினை விசாரித்த நீதிபதிகளிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடமாற்றத்தில் சென்று விட்டதால் தான் சாதிச்சான்றிதழ் வழங்க முடியவில்லை என விளக்கமளித்துள்ளனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.  அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவ்வாறு அவர்களை இட மாறுதல் செய்த அதிகாரிகளை கண்டித்தும், சான்றிதழைத் தர மறுத்து மனுதாரரை அலைக்கழித்த ஆர்டிஓவிற்கு ரூ. 50,000/- அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் அப்பெண் கேட்ட சாதிச்சான்றிதழை உடனே வழங்குவதுடன், அவ்வாறு அளிக்கப்பட்ட சான்றிதழ் நகலுடன்  சம்பந்தப்பட்ட ஆர்டிஓ நேரில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

– லெட்சுமி பிரியா