சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்த கோவில்களில், அறங்காவலர்கள் நியமிக்கப்படாத வரை, கோயில் நகைகளை உருக்க தடை விதிப்பதாக  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களுக்கு சொந்தமான நகைகளை உருக்கி,  தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலம் கோவில்களை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளதாக  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். தொடர்ந்து அதற்கான ஆணை வெளியிடப்பட்ட நிலையில், அதை கண்காணிக்கவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டது. இதையடுத்து, அதற்காக நிகழ்ச்சியும் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகஅரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “இந்து சமய அறநிலைய சட்டத்தில் கோயிலுக்குச் சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை. அறநிலையத் துறை, கோவில் நிர்வாகத்தில் மட்டும் தலையிட முடியும். தவிர மத வழிபாட்டு விவகாரங்களில்  தலையிட முடியாது.

வருவாய் ஈட்டுவதற்காக நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பதில், ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம்.  கோயில் நகைகள் தொடர்பாக முறையாக எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படாத நிலையில், நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்வது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் நகைகளை உருக்குவது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுமீதான கடந்த விசாரணையின்போது, தமிழகஅரசு சார்பில், இது வழக்கமான நடைமுறை என்றும், , 1977ஆம் ஆண்டிலிருந்து கோயில் நகைகளை உருக்கும் நடைமுறை  உள்ளதாகவும், இதனால் ஆண்டுக்கு 11 கோடின ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனை நிர்வகிக்கவும் கோயில் நகைகளைக் கணக்கெடுக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதால் தவறு நடக்காது எனவும் வாதிடப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே உத்தரவிட்டபடி, கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படபாத வரை, கோவில்களுக்கு காணிக்கையாக  நகைகளைக் கணக்கெடுப்பதில் தவறில்லை, ஆனால்,  கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று கூறியுள்ளது. மேலும், இதை   தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளதுடன் தமிழக அரசு பதிலளிக்க எனவும் ஆணையிட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர்15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ரூ.11 கோடி வட்டி வருகிறது, 1977ம் ஆண்டு முதல் கோவில் நகைகளை தங்கக்கட்டிகளாக உருக்கும் நடவடிக்கை உள்ளது! உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்…