சென்னை
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள இடை நிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை அரசுக்கு வைத்தனர். இதற்கான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை ஒட்டி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக 4.5 லட்சம் ஆசிரியர்களும் 6.5 லட்சம் அரசு ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதை ஒட்டி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் வேலை நிறுத்தத்தினால் தொடக்கப் பள்ளிகள் பெருமளவில் செயல்படவில்லை. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த கோகுல் என்னும் மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்தார்.
ஏற்கனவே ஆசிரியர்களின் வேலை நிறுத்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அதை தனி நீதிபதி விசாரிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.
அதை எதிர்த்து மாணவர் கோகுல் மேல் முறையீடு செய்தார். அதை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அந்த அமர்வு வரும் 25 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.