சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் தங்கம் தென்னரசு மீதான வழக்கில் புலன் விசாரணை அதிகாரி இன்று ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை விடுவித்துப் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

நேற்றைய விசாரணையில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித் குமார்,

“எனது கட்சிக்காரர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரின் மனைவி என்பதற்காக முறையான விசாரணையைக் கூட நடத்தாமல், பாரபட்சமான முறையில் காவல்துறை வழக்கைத் தொடர்ந்துள்ளது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. எனது கட்சிக்காரர் தன்னுடைய வருமானத்துக்கு உரிய கணக்கைத் தாக்கல் செய்து அதற்கு உரிய வருமான வரியையும் தாக்கல் செய்துள்ளார். 

வழக்கின் புலன் விசாரணையின்போது, கூடுதல் ஆதாரங்களைச் சேகரித்து, அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதை ஏற்று வழக்கில் இருந்து என் கட்சிக்காரரை விடுவித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யத் தேவையில்லை.

என்று வாதிட்டார்.

நீதிபதி,

“இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்து பின்னர், அவரே இந்த வழக்கை மேல்விசாரணைக்கு அனுமதி கோரியுள்ளார். ஆகவே, இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டியதுள்ளதால், நாளை (இன்று) பிற்பகலில் அவர் நேரில் ஆஜராக வேண்டும்” 

என்று உத்தரவிட்டார்.