சென்னை

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு 2 அமைச்சர்கள் மீது பதியப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இப்போது ரத்து செய்துள்ளது.

கடந்த 2005 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி சென்னை மாநகராட்சி 131 ஆம் வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது.   வாக்குப்பதிவின் போது கே கே நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அத்துமீறி நுழைந்து தேர்தல் அலுவலரிடம் இருந்து முத்திரையைப் பறித்துச் சென்றதாகவும் தந்து காரை சேதப்படுத்தியதாகவும் அதிமுகவைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் மா சுப்ரமணியன், மற்றும் தா மோ அன்பரசன் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டு இந்த வழக்கு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  அமைச்சர்கள் மா சுப்ரமணியன் மற்றும் தா மோ அன்பரசன் உள்ளிட்டோர் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்தும் நீதிபதி எம் நிர்மல் குமார் அமர்வில் மனுதாரர்கள், “இது அரசியல் முன் விரோதம் காரணமாக பதியப்பட்ட பொய் வழக்கு ஆகும்.  இதில் காவல்துறையினர் சரியாகப் புலன் விசாரணை செய்யவில்லை.  இது வரை இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கப்படவில்லை” எனத் தெரிவித்தனர்.  ஆனால் இந்த விசாரணையை மனுதாரர்கள் தாமதப்படுத்தியதாக  காவல்துறை தெரிவித்தது.

நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, “இந்த வழக்கில் புகார் அளித்தவரின் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதால் ஏற்பட்ட சேதம் குறித்த மதிப்பீடு அறிக்கையில் குறிப்பிடவில்லை.  மேலும் இத்தனை ஆண்டுகளாக இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.   எனவே அமைச்சர்கள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்” என உத்தரவிட்டுள்ளார்.