சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்துள்ளது. 

 

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார்.  அப்போது வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.  கடந்த 2016ம் ஆண்டு இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்து இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி வருமானத்திற்கு அதிகமாக 64.90 சதவிகிதம் சொத்துக் குவித்தது நிரூபணமாகியுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் வரும் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அன்றைய தினம் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அல்லது காணொலி வாயிலாக ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.