சென்னை
இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்களை பாதுகாப்பதில் அஜாக்கிரதையாகச் செயல்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
சென்னை நகரில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த உத்தரவைச் செயல்படுத்தவில்லை. இதையொட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கைத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரின் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு விசாரணையில் மனுதாரர் தரப்பில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் அளவீடுகளும் இந்து அறநிலையத்துறை அளித்த நில அளவீடுகளும் மாறுபட்டுள்ளதாக கூறப்பட்டது.
எனவே நீதிபதிகள் கோவிலுக்கு சொந்தமான நிலம், ஆக்கிரமிக்கப்பட்ட நிலம், மீட்கப்பட்ட நிலம் ஆகியவற்றின் அளவு குறித்து விவரமான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். கோவில் நிலங்களைப் பாதுகாப்பதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அஜாக்கிரதையாக செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.