சென்னை:

வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமின் பெற்றுள்ள  திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில்,  காவல்துறை மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து தவறான கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் மே 23ஆம் தேதி கைது செய்யப்பட்டு,  ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் அவரது ஜாமினை ரத்து செய்ய மறுத்து விட்டது. பின்னர்,  தமிழக அரசு உச்சநீதி மன்றத்தை நாடியது. உச்சநீதி மன்றமோ, சென்னை உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.

இதையடுத்து, மீண்டும் காவல்துறை தரப்பில்? ஆர்எஸ்.பாரதியின் ஜாமினை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, சதிஷ்குமார், மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜாமீனை ரத்துசெய்ய எந்தக் காரணமும் இல்லை. விரோதப்போக்குடன் மாநில அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது” என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இவ்வழக்கில் இன்று (ஜூன் 23) தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதீஷ்குமார், ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்ததுடன், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.