அருமை மகளின் மரணப் போராட்டம்.. அசரவே அசராத ஆட்டோ டிரைவர்..

 ‘வில்சன்’ என்ற அரிய வகை நோய் நம் உடலில் தாமிர சத்து, தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும் பாதிப்பு ஆகும். கல்லீரலில் உற்பத்தியாகும் ‘செருலோபிளாஸ்மின்’ புரதம் உடலுக்குத் தேவையான தாமிரத்தை எடுத்துக்கொண்டு மீதியைப் பித்தம் வழியாக வெளியேற்றிவிடும். இந்தப் புரதம் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடலில் தாமிரம் ஆங்காங்கே சேர்ந்து கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலம் போன்றவற்றைப் பாதிக்கும். லட்சத்தில் மூன்று பேருக்கு இந்தப் பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அப்படி ஒரு நோயினால் பாதிக்கப்பட்டவர் தான் சென்னை கிரீம்ஸ் வே பகுதியில் உள்ள வெங்கடேசன் என்ற ஆட்டோ டிரைவரின் மகள் ஆர்த்தி.  இந்நோய்க்கு உள்ளாகியவர்கள் அது தரும் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அரிதான ஒன்று.  தன்னுடைய 13 வயதிலிருந்து வில்சன் நோயுடன் போராடி வருகிறார் ஆர்த்தி. வில்சன் நோய் தாக்கத்தால் கல்லீரல் செயலிழப்பு, நடக்க இயலாத நிலை, பித்தக்குழாய் பாதிப்பு என நோயின் பாதிப்பு ஒரு புறம். மரண வேதனை தரும் சிகிச்சை ஒரு புறம். இவற்றைக் கடந்து தன்னுடைய படிப்புக்காகவும் எதிர்காலத்துக்காகவும் வில்சன் நோயுடன் தொடர்ந்து போராடி வருகிறார் ஆர்த்தி.

தினமும் ஆட்டோ ஓட்டினால் தான் சாப்பாடே என்னும் நிலையலிருந்தும் கடந்த 13 வருடங்களாக இவர்களின் சாப்பாட்டைக்கூடத் தியாகம் செய்து தன் மகளுக்கு மருந்து மாத்திரைகளைத் தவறாமல் வாங்கிக்கொடுத்து வருகின்றனர்.

ஆர்த்திக்கு 10 வயது இருந்தபோது திடீரென வாந்தி, மயக்கம் வந்ததால் டாக்டரிடம் அழைத்துச்சென்ற போது தான் இந்த பித்தப்பை பாதிப்பு குறித்து தெரிய வந்துள்ளது.   அப்போதிருந்தே இந்த மருந்து மாத்திரைகளால் தான் உயிர் வாழ்ந்து வந்திருக்கிறார் ஆர்த்தி.  இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பிசிஏ வரை சென்றிருக்கிறார் இவர்.  இந்நிலையில் தனது 19-வது வயதில் உடல்நிலை தீவிரமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்ற பொழுது தான் கல்லீரல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு என்கிற நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பதிந்து, காத்திருந்து, கல்லீரல் கிடைக்கப்பெற்று, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தொடர்ந்து மீண்டும் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தார் ஆர்த்தி.

ஆனால் அந்த சந்தோசமும் இரண்டு மாதம் கூட நீடிக்கவில்லை இவருக்கு.  கல்லீரல் பிரச்சினைக்காக ஆர்த்தி தொடர்ந்து எடுத்துக்கொண்ட மாத்திரைகளின் சைட் எஃபக்ட்டினால் உடலில் வெள்ளையணுக்கள் குறைந்து போக, ஒரு சின்ன காயம் ஏற்பட்டாலும் இரத்தம் உறையாமல் இரண்டு மணி நேரம் கூட தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்குமாம்.  வயதிற்கு வந்த பெண் என்பதால் பீரியட் சமயத்தில் இந்த இரத்தப்போக்கு இவருக்கு மிகப்பெரும் பிரச்சினையாகி பத்து நாட்கள் வரை கூட நிற்காமல் அவஸ்தைக்குள்ளாகி வருகிறதாம்.  இதனால் பீரியட் நேரத்தில் இதற்கென ஒரு யூனிட் வரை பிளேட் லெட் ஏற்றி வருகின்றனராம்.   அது மட்டுமல்லாது மருந்தில் உள்ள ஸ்டீராய்டு தொடை எலும்பிலும் பாதிப்பை ஏற்படுத்தி தற்போது இவரால் நடக்கவும் முடியாமல் போய்விட்டது.

பித்தப்பை குறைபாட்டிற்கென திரும்பவும் ஸ்டான்லி மருத்துவமனை சென்று அடுத்த ஆபரேசனுக்கு தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கு குறுக்கிட்டதால், மருத்துவர்கள் வேறு வழியின்றி இவரின் வயிற்றில் துளையிட்டு அவ்வப்போது கழிவுப்பையை மாற்றிக்கொள்வது போன்ற ஏற்பாட்டினை செய்து தர அவரது தந்தை தான் அடிக்கடி அந்த பையை மாற்றி உதவி வருகிறார்.

இந்த சிகிச்சைகளுக்கென இதுவரை  பல இடங்களில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவிட்டுள்ளார் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன்.  நடக்கக்கூட முடியாத நிலையிலும் எப்படியும் வீட்டிலிருந்த படியாவது படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட வேண்டுமென்கிற நம்பிக்கையுடன் ஆர்த்தியும், இன்னும் எத்தனை லட்சம் செலவு செய்தாலும் தன் மகளைக் காப்பாற்றி விட வேண்டுமென அவரது பெற்றோரும் விடா முயற்சியுடன் போராடி வருகின்றனர்.

– லெட்சுமி பிரியா