சென்னை: சென்னை மணலி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள 740டன் அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாளில் அகற்ற வேண்டும் என்று சுங்கத்துறைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு  லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ருட் துறைமுகம் அருகே உள்ள சேமிப்புக் கிடங்கில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அந்த பகுதியே உடைந்து நொறுங்கி சீர்குலைந்தது. இந்த வெடிவிபத்து உலக நாடுகளை எச்சரிக்கை செய்ய வைத்தது.
இதையடுத்து,  இந்தியாவில் துறைமுகங்கள், சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட் போன்ற வெடிக்கும் தன்மை உள்ள பொருட்கள் குறித்து ஆய்வு செய்து 48 மணி நேரத்தில் அறிக்கை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதையடுத்து,  சென்னை மணலி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில், கண்டெய்னரில்,  அம்மோனியம் நைட்ரேட் பாதுகாவைக்கப்பட்டுள்ள சேமிப்புக்கிடங்கில் தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து,  கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பாதுகாப்பாக இருப்பதாக  தெரிவித்தனர். அத்துடன்,  அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள பகுதி சென்னையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாகவும் சென்னைக்கு எந்தவித அச்சுறுத்தலும்  இல்லை என்றாலும்,  விரைவில் அப்புறப்படுத்தப்படும் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
இந்த நிலையில், மணலி குடோனில்  கண்டெய்னரில் வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாட்களில் அங்கிருந்து அகற்ற சுங்கத்துறைக்கு  தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு உள்ளது.