சென்னை
சென்னையைச் சேர்ந்த மாணவி பிரியங்கா மற்றும் அவர் தாய் மைனாவதி ஆகியோர் நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததற்காகப் பிடிபட்டார். சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டதையடுத்து மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை சிபிசிஐடி காவல்துறை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஆள் மாறாட்டம் செய்ததாகச் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோரும் இவர்களது தந்தை சரவணன், டேவிட் ஆகியோரையும் சிபிசிஐடி காவல்துறை கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் வேலூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த மாணவர் இர்பான், அவரின் தந்தை முகமது சபி ஆகியோரையும் நீட் ஆள் மாறாட்ட மோசடிக்காக சிபிசிஐடி காவல்துறை கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி தேனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று புதிதாக இன்னும் ஒரு மாணவி நீட் மோசடியில் கைதாகி உள்ளார். நேற்று முன் தினம் சென்னை அருகே தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக்கல்லூரியில் பயிலும் தர்மபுரியைச் சேர்ந்த மாணவி பிரியங்காவை, சிபிசிஐடி காவல்துறை விசாரித்தனர். இதைத் தொடர்ந்து மாணவி பிரியங்கா மற்றும் இவரது தாயார் மைனாவதி ஆகியோரை, சிபிசிஐடி காவல்துறை நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு ரகசியமாகத் தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகம் கொண்டு வந்தனர்.
அந்த நேரத்தில் மாணவி பிரியங்கா அழும் சப்தம் கேட்டதும் செய்தியாளர்கள் அலுவலகம் முன்பு திரண்டனர். காவல்துறையினர் அலுவலகத்தின் அனைத்து ஜன்னல்களையும் பூட்டிக்கொண்டனர். அதன் பின்னர் காலை முதல் பகல் 1 மணி வரை தொடர்ந்து காவல்துறையினர் பிரியங்கா, மைனாவதி ஆகியோரிடம் விசாரணையை நடத்தி உள்ளனர்.
விசாரணையின் போது மைனாவதி நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதனால் தாய், மகள் இருவரையும் சிபிசிஐடி போலீசார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் நடந்த பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் இருவரையும், மதியம் 3.30 மணியளவில் தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்குக் கொண்டு சென்று விசாரணையை தொடர்ந்து நடத்தினர்.
அதற்குப் பிறகு இருவரையும் கைது செய்து தேனி குற்றவியல் நீதிபதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை சவீதா மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் தாமோதரன், கண்காணிப்பாளர் பொன்னம்பல நமச்சிவாயம் மற்றும் ஒரு பெண் ஊழியர் என மூவர் தேனி சிபிசிஐடி அலுவலகம் வந்துள்ளனர். இவர்கள் மூவரிடமும் காவல்துறையினர் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி உள்ளனர்.
கைதான மாணவி பிரியங்காவின் தந்தை அர்ச்சுனன் சென்னையில் பிரபல வழக்கறிஞர் ஆவார். தற்போது இவர் ஓடி ஒளிந்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அர்ச்சுனனை சிபிசிஐடி காவல்துறை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.