சென்னை: தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சிலின் தொழில்நுட்பக் கமிட்டி அனுமதியளித்துள்ளது.

கவுன்சிலின் அதிகார அமைப்பும் இதற்கான இறுதி அனுமதியை வழங்கிவிட்டால், வரும் 2020ம் ஆண்டு மருத்துவச் சேர்க்கையின்போது, தமிழகத்தில் கூடுதலாக 900 மருத்துவ இடங்களை சேர்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார் தமிழக சுகாதார அமைசசர் விஜய பாஸ்கர்.

இதன்மூலம் தமிழகத்தில் உள்ள மொத்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 4150 ஆக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களை ஒதுக்கும் ஆணையை மாநில சுகாதாரத்துறை பிறப்பித்துள்ளது.

“மருத்துவர்கள், செவிலியர்கள், துணைமருத்துவப் பணியாளர்கள் ஆகியோரை நியமனம் செய்தல் மற்றும் உபகரங்களை வாங்குதல் உள்ளிட்டப் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி வாங்கும் பணியை சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகச்சிறப்பாக செய்து முடித்தார்கள்” என்று தெரிவித்தார் விஜயபாஸ்கர்.