சென்னை: பருவமழையால் தமிழகத்தின் தலைநகர் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்னும் மழை வெள்ள நீர் அகற்றப்படாததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாக உள்ளனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் பெய்த மழையால் சென்னை நகரில் தாழ்வான பகுதி களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் கால்வாய்கள் நிரம்பி சாலைகளிலும், மழைநீர் சூழ்ந்தது. மணலி, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங் களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும், முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொரட்டூர், கொளத்தூர் ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், பெரவலூர், புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம் ஆகிய முக்கிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை இன்னும் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு- பகலாக மாநகராட்சி ஊழியர்கள் அடைப்புகளை சரிசெய்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மீட்புப்பணியில் பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது. 3-வது நாளாக தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். ஒருசில இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் நேற்று வரை 140 இடங்களில் தேங்கி இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 200 இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. அந்த பகுதிகளில் 325 மோட்டார்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக மேற்கு மாம்பலம் பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தி.நகர். மேட்லி சுரங்கப்பாதையும், ரங்கராஜபுரம் சுரங்கபாதையிலும் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளது. அங்குள்ள கால்வாய்கள் நிரம்பிவிட்டன. ஆனாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமம் உள்ளது, சுமார் 2000 பணியாளர்கள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், இன்று வங்க கடலில் அந்தமான் அருகே உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் 10ந்தேதி 11ம் தேதி சென்னை உள்படவட மாட்டங்களில் கடும்மழை இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
சென்னையில் மழை நிவாரண பணிகளை இன்று 3வது நாளாக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தி நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார். அதுபோல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் ஆய்வு செய்த நிலையில், இன்று யானைக்கவுனி பகுதியில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து வடசென்னை பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், அதிமுக ஆட்சியில் சென்னையில் 3,000 இடங்களுக்கு மேல் தண்ணீா் தேங்கும் சூழல் இருந்தது. அதையெல்லாம் தூா்வாரி தண்ணீா் தேங்காத நிலையை ஏற்படுத்தினோம். 60 இடங்களில்தான் தண்ணீா் தேங்கும் நிலை இருந்தது. அதைக்கூட திமுக அரசால் தடுக்க முடியவில்லை
மழையால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை என்று குற்றம் சாட்டியவர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருந்துகள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.