சென்னை

சென்னையில் மீன் விற்பனையில் சிக்கல் நீடித்து வருவதால் நேற்று மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மறுத்துள்ளனர்.

நேற்று (ஜூன் 15)  முதல் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது.  இதையொட்டி மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிப்பார்கள் என எதிர்பார்ப்பு நிலவியது.   ஆனால் நகரில் மீன் விற்பனை சந்தைகள் பலவற்றை அரசு மூடியுள்ளது.   மேலும் வெளி மாநில தொழிலாளர்கள் சென்னை வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதற்கு மீனவர்கள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அகில இந்திய மீனவர்கள் சந்த தேசிய செய்தி தொடர்பாளர் ரவி, “நகரில் உள்ள அனைத்து மீன் விற்பனை சந்தைகளையும் இயங்க அனுமதிக்க வேண்டும்.  மேலும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை நீக்கச் சென்னை வெளிமாநில தொழிலாளர்கள் சென்னை வர அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு அளித்துள்ளோம்.

மீன்வளத்துறை எங்கள் கோரிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.  தமிழகத்தில் ராமேஸ்வரம் உள்ளிட்ட அனைத்து பகுதி மீனவர்களும் மீன் விற்பனை செய்ய மிகவும் சிரமங்களைச்  சந்தித்து வருகின்றனர்.  ஆகவே இது குறித்து மீன்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மாட்டோம்” என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர், “வரும் 18 ஆம் தேதி முதல் மீனவர்களில் ஒரு  பகுதியினர் மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளனர்.  மற்ற பிரிவினரிடமும் அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அரசு இதற்கு நேர் மாறாக ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மீன்வளத்துறை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், வரும் 19 ஆம் தேதி அதிகாலை 12 முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.  ஆகவே மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்” என கூறப்பட்டுள்ளது.