சென்னை:
கொரோனாவுக்கு பலியான சென்னை பிரபல மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதல் நடத்தியதாக  கைது செய்யப்பட்ட 8 பேருக்கு, சென்னை எழும்பூர் நீதி மன்றம் இன்று  நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
மருத்துவர் சைமன்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சைமன், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் மரணம் அடைந்தார். அவரது உடலை சென்னை கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ மயானத்தில் அடக்கம் செய்ய கொண்டுவந்தபோது, அந்த பகுதி மக்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் தாக்கப்பட்டது. பின்னர் வேறு மயானத்தில், அவரது உடல்  அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,  தாக்குதலில் ஈடுபட்டதாக சுமார் 20 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர்.  மேலும் 90 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது.
இதில் பலர் ஏற்கனவே ஜாமினில் வெளியே வந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளாக கருத்தப்பட்ட 8 பேருக்கு இன்று சென்னை எழும்பூர் நீதி மன்றம் நிபந்தனை  ஜாமின் வழங்கி உள்ளது.
அதன்படி,  குற்றம் சாட்டப்பட்டுள்ள  8 பேரும், சாட்சிகளை கலைக்க கூடாது, அழைக்கும் போது ஆஜராக வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.