சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து சிறந்த பலனை தருவதாக மக்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ள நிலையில், மருந்துக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதையடுத்து பல மருந்தங்கள், மருத்துவர்கள் அதிக விலைக்கு ரெம்டெசிவர் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர். அதுபோல, சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை ரூ.20,000க்கு விற்பனை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கோரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை வசதியுடனான சிகிச்சை கொடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதை பல தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பணம் பறித்து வருகின்றனர். குறைந்தது 2 லட்ச ரூபாய் கட்டினால்தான் சிகிச்சை’ என கூறப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதனால் சாமானிய மக்கள் சிகிச்சை பெறுவதில் கடும் சிக்கல் எழுந்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு கொரோனா தொற்றின் தன்மையைப் பொறுத்து `ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்’ எனவும் கூறிவிடுகின்றனர்.
இந் நிலையில், ரெம்டெசிவிர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில், ரெம்டெசிவிர் மருந்து, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.1,568 என்ற விலையில் தமிழக அரசு விநியோகித்து வருகிறது. இங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இநத் நிலையில், சென்னை தாம்பரத்தில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.20,000க்கு விற்பனை செய்த இம்ரான்கான் என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடந்தையாக இருந்தவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.