சென்னை

சென்னையில் மழைநீர் சேகரிப்பு செய்யும் கட்டிடங்களுக்குத் தனி நிறமுள்ள ஸ்டிக்கர் மூலம்  அடையாளம் காணச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தற்போது சென்னையில் தண்ணீர் பஞ்சம் மிகவும் அதிகமாக உள்ளது.   பல இடங்களில் நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்றுள்ளது.   இந்த நிலையை மாற்ற முன்பு மழை நீர் சேகரிப்பு திட்டம்  அறிவிக்கப்பட்டது.   அதற்குக் கெடு விதிக்கப்பட்டு அந்த அமைப்பைச் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது.   ஆனால் அதன் பிறகு அந்த திட்டம் கண்டுக் கொள்ளாமல் விடப்பட்டது.

தற்போது தண்ணீர் பஞ்சம் தாங்க முடியாத அளவுக்குச் சென்றதால் மாநகராட்சி அந்த அறிவிப்பை மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளது.   அதை ஒட்டி நகரில் 1.4 லட்சம் தனி வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் சோதனை இடப்பட்டன.  இவற்றில் 41000 இடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அமல்படுத்தப்படவில்லை.  இதை ஒட்டி மழைநீர் சேகரிப்பு திட்டம் செய்யப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு நீல நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

இந்நிலையில் இந்த ஸ்டிக்கர்கள் இரு வண்ணத்தில் ஒட்டப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.   பழைய முறைப்படி மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமைத்தவர்களுக்கு நீல நிற ஸ்டிக்கரும் புதிய  முறைப்படி அமைத்தவர்களுக்குப் பச்சை நிற ஸ்டிக்கரும் ஒட்டப்பட உள்ளன.   திட்டம் அமைக்கப்படாத கட்டிடங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட மாட்டாது.  இது கடந்த சனிக்கிழமை முதல் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர், “மாநகராட்சி வார்டு வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.  மொத்தம் 1,42,396 கட்டிடங்கள் சோதனை இடப்பட்டன.  இவற்றில் 77,975  கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு திருப்திகரமாக உள்ளது.  அத்துடன் 23,146 இடங்களில் இந்த அமைப்பு சரியான பராமரிப்பு இன்றி உள்ளது.  அதே நேரத்தில் 41,275 கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு இல்லை.

தற்போது இந்த நிற அடையாளத்தின் மூலம் எங்களால் அமைப்பு ஏற்படுத்தாத கட்டிடங்கள் மற்றும் அமைப்பை பராமரிக்காத கட்டிடங்களைக் கண்டறிய முடியும்.  புதிய அமைப்பை உண்டாக்கவும் பழைய அமைப்பைச் சீர் செய்யவும் எங்களது நிபுணர்கள் உதவத் தயாராக உள்ளனர். இந்த மழைக்காலத்துக்கு முன்பு குறைந்தது 2 லட்சம் கட்டிடங்களில் இந்த திட்டத்தை அமைக்க இலக்கு வைத்துள்ளோம்’ என தெரிவித்தார்.