சென்னை: தடுப்பூசி மையங்களுக்கு வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடப்படும் என  சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 17.06.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 22,73,931 பேருக்கும், 17.06.2021 அன்று 21,570 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள், சென்னை மாநகராட்சி அளித்துள்ள   உதவி எண்கள் மூலம் விபரத்தை தெரிவித்தால் அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மேலும் பேச்சு மற்றும் செவித் திறன் குறைபாடு உள்ளவர்கள் காணொலி மூலம் விபரம் தெரிவிக்க பிரத்யேக உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

உதவி எண்: 18004250111 காணொலி உதவி எண் (பேச்சு மற்றும் செவித் திறனற்றவர்களுக்கு மட்டும்): 9700799993.