சென்னை

குறிப்பிட்ட காலத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரருக்குச் சென்னை மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணி KFW என்ற ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.1714 கோடி மதிப்பீட்டில் 300 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.   தற்போது முதற்கட்டமாக ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட நங்கநல்லூர் முதல் பிரதான சாலை, 6வது பிரதான சாலை, இந்து காலனி, கண்ணன் காலனி, ராம் நகர், சீனிவாச நகர், குபேரன் நகர், எல்.ஐ.சி நகர் ஆகிய பகுதிகளில் ரூ.150. 47 கோடி மதிப்பீட்டில் 39 .78 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்துடன் ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட புவனேஸ்வரி நகர், பாலாஜி நகர், ராதா நகர், மடிப்பாக்கம், அன்னை சத்யா நகர், லட்சுமி நகர், குபேரன் நகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள எம். சி .என் நகர், விஜிபி அவென்யூ, சந்திரசேகர் அவென்யூ, ஜவகர் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.447.03 கோடி மதிப்பீட்டில் 120.55 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்குப் பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

ஒரு சில இடங்களில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியினை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்காமல் தாமதமாக பணியினை மேற்கொண்டுள்ள ஒரு ஒப்பந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.