சென்னை: தமிழக தலைநகரில் ஜுன் 10ம் தேதி வரை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 12175 பேரில், 277 நபர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விபரம் சென்னை பெருநகர கார்ப்பரேஷன் நிர்வாகத்திற்கு தெரியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கோவிட்-19 பாசிடிவ் முடிவுகள் பெறப்பட்ட மொத்த நபர்களில், 5038 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர், 1850 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
3289 பேர் கோவிட் கவனிப்பு மையங்களில் உள்ளனர். இந்நிலையில், கணக்கில் வராத அந்த 277 பேரை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று ஒரு நபருக்கு உறுதிசெய்யப்பட்டால், அவரைப் பற்றிய தகவல், பொது சுகாதாரத்துறை இயக்குநரகத்தில் அளிக்கப்படும். அங்கிருந்து அத்தகவல் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு அளிக்கப்படும்.
தற்போதைய நிலையில், அந்த 277 நபர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது சென்னை மாநகராட்சி. சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் தொடர்பு எண்கள் மற்றும் முகவரியின் அடிப்படையில்தான் ஆட்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.
ஆனால், அந்த விபரங்களே தவறாக தரப்படுகையில், சிக்கல்கள் ஏற்படுகின்றன. “மாநகர நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றியடையவில்லை எனும்போது, இறுதியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும். தற்போது முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. எப்படியும், அந்த நபர்களைக் கண்டுபிடிப்போம்” என்கிறார் சென்னை மாநகர நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ்.