சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட  333 இடங்களில் சாலைகளில் தேங்கிய மணல், வாகனம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சென்னையில் குப்பை கூளங்கள் மட்டுமின்றி சாலையில் தேங்கும் மணல் மற்றும்  கட்டிட கழிவுகளையும் மாநகராட்சியினர் அகற்றி வருகின்றனர். மேலும்,  மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் என மொத்தம் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால், முக்கிய பகுதிகளில்,   இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்து செல்லும் சாலைகளில் இரவு நேரங்களில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையோரங்கள் மற்றும் சாலை மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய மணல் மற்றும் தூசிகள் படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், நாளடைவில் சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் சென்று அடைப்பையும் ஏற்படுத்துகின்றன.

எனவே பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொது மக்களுக்கும், போக்கு வரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்காள்ளப்பட்டு வருகிறது. இதையும் படியுங்கள்: மின் கட்டணத்தை முன் கூட்டியே செலுத்த ஸ்மார்ட் மீட்டர் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் (பகுதி அளவு) ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய சென்னை என்விரோ என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் 15 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலமும், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் (பகுதி அளவு) மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 16 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதுபோல,  தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் சார்பில் 47 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் என மொத்தம் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களின் மூலம் ஒவ்வொரு மண்டலத்திலும் நாளொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 கி.மீ அளவிற்கு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், 16.2.2023 முதல் 15.3.2023 வரை இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் 333 இடங்களில் உள்ள மணல் மற்றும் தூசிகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் மணல் மற்றும் தூசிகள் அதிகளவில் காணப்பட்டால், மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.