சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்: சென்னை கார்ப்பரேஷன் எச்சரிக்கை

Must read

சென்னை:

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் பொது டங்களிலும், அலுவலகங்களிலும் மக்கள் முககவசம் அணிவது கட்டாயம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும் போது, மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என கூறினார். தொடர்ந்து அவர், ஏப்ரல் 20-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். பின்னர் தளர்வுகள் இருக்கும் என கூறினார். இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான பால், மளிகை, மருந்து, உணவு பொருட்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவைக்கு தடை தொடரும். மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மத வழிபாட்டு தலங்களுக்கும் தடை நீடிக்கிறது.நாடு முழுவதும் பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் மக்கள் முககவசம் அணிவது கட்டாயம் ஆகும். பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று தொற்றுநோய் மற்றும் பொது சுகாதார சட்டங்களின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு கடந்த 14-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதையொட்டி அத்தியாவசிய பொருட் களை வாங்குவதற்காக காலை முதலே மக்கள் வெளியில் வர ஆரம்பித்தனர்.

இதில் பலருக்கு, முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட விஷயம் தெரியவில்லை. இன்னும் சிலரோ சென்னை மாநகராட்சி கமிஷனரின் உத்தரவை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமல் சாலைகளில் உலா வந்தனர்.

சென்னை அண்ணா சாலை-வாலாஜா சாலை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முக கவசம் அணிவது தொடர்பான உத்தரவை மிகவும் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினர்.

அதன்படி முக கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு போலீசார் ரூ.500 உடனடி அபராதம் விதித்தனர். அதேபோல் சாலையில் காரணமின்றி சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜூன் 1-ந் தேதிக்கு மேல் வந்து வாகனங்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

அதே சமயம் ஒரு சில இடங்களில் முக கவசம் அணியும் விவகாரத்தில் பொதுமக்களிடம் போலீசார் சற்று கனிவுடன் நடந்து கொண்டனர்.

முதல் நாள் என்பதால் பெரும்பாலானவர்களுக்கு முக கவசம் அணிவது கட்டாயம் என்பது தெரியாமல் இருக்கலாம் என்று கருதி, முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அவர்களே முக கவசங்களை அணிவித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More articles

Latest article