கொரோனா நிவாரண பணி புரிந்த 700 சுகாதார ஊழியர்களை பணி நீக்கம் : சென்னை மாநகராட்சி உத்தரவு

Must read

சென்னை

கொரோனா பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 700 சுகாதார ஊழியர்களை பணியில் இருந்து விலக உத்தரவிட்டுள்ளது.

கொரோனா எதிர்ப்பு பணியில் ஏராளமான சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களுக்கு நாடெங்கும் புகழ் மாலைகள் சூட்டப்பட்டு வருகின்றன.  கடந்த வருடம் மார்ச் மாதம் 22 ஆம் தேதி அன்று பிரதமர் இவர்களுக்காக கை தட்டி ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.  அதன் பிறகு அதே வருடம் ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று இவர்களுடைய பணியைப் பாராட்டி விளக்குகள் ஏற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நாட்டிலுள்ள அனைத்து பொதுமக்களும் பிரதமர் கூறியபடி கை தட்டியும் விளக்குகள் ஏற்றியும் சுகாதார ஊழியர்களைப் பாராட்டி ஊக்கம் அளித்தனர்.  ஆனால் அரசு இவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறதா என்பதை விட இவர்களது வாழ்வாதாரத்தையே அழிக்கும் பணிகளைச் செய்து வருகிறது எனக் கூறலாம்,.  ஆம். கொரோனா தொற்று ஒரு முடிவுக்கு வராத வேளையில் சென்னை மாநகராட்சி சுமார் 700 சுகாதார ஊழியர்களை பணியில் இருந்து விலக உத்தரவிட்டுள்ளது.

இது சுகாதார ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டு வந்த சரோஜா என்னும் பெண் தற்போது பணியை இழந்துள்ளார். இந்தப் பெண் கணவரை இழந்து குழந்தையை வளர்த்து வருகிறார்.  தற்போது இந்த பணியின் மூலம் தனது குழந்தை, மாமியார் மற்றும் தனது தந்தையைக் காப்பாற்றி வரும் இவருக்கு இந்தப் பணியை இழந்தது மிகவும் கவலையை அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இவரைப் போல் கடந்த 10 வருடங்களாகச் சுகாதார பணியில் ஈடுபட்டு வந்த சிவசங்கரி தனது பணியின் போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறி உள்ளார். அப்போது நடக்கவும் முடியாமல் இவர் துயருற்று இருந்துள்ளார்.    தற்போது ஓரளவு உடல் நலம் தேறி பணிக்கு வரும் போது இவரை பணியை விட்டு நீங்குமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதால் மிகவும் துயருற்றுள்ளார்.

இவர்களைப்போல் கலையரசியும் கொரோனா நோயாளிகளுக்கு மற்றவர்கள் செய்யத் தயங்கும் பணிகளையும் செய்துள்ளார்.  ஆனால் இவரையும் தற்போது பணியில் இருந்து நீங்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது,

மற்றொரு பெண் ஊழியர் கொரோனா நோயாளிகளுக்குப்  பணிவிடை செய்ததால் இவருக்கு யாரும் குடிநீர் கொடுக்கவும் தயங்கி உள்ளனர்.  இதே காரணத்துக்காக இவர் தனது வீட்டை காலி செய்ய வேண்டும் எனக் கூறி அவர் வேறு வீடு மாற்றி உள்ளார்.    இவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டவரில் ஒருவர் ஆவார்.

இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் தங்களை பணியில் அமர்த்த வேண்டும் என வேண்டிக் கொள்கின்றனர்.  தங்களுக்குப் பாராட்டு அளிப்பதை விட பணியை மீண்டும் அளிப்பதே தற்போதைய தேவை எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article