சென்னை: சென்னை மாநகராட்சி நடவடிக்கையால்  கடந்த 8 மாதங்களில் 6,719 ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 06.02.2023 முதல் 17.02.2023 வரை பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 268 நிரந்தர ஆக்கிரமிப்புகள் மற்றும் 440 தற்காலிக ஆக்கிரமிப்புகள் மாநகராட்சியால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை மண்டலம், எத்திராஜ் சாலையில் தற்காலிக ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக்கழிவுகளை அகற்றுதல், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 6-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 15 மண்டலங்களில் உள்ள பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் 268 நிரந்தர கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள் மற்றும் 440 தற்காலிக கூடாரங்கள் போன்ற ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 708 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 8 மாதங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்த 2,730 நிரந்தர ஆக்கிரமிப்புகள் மற்றும் 3,989 தற்காலிக ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 6,719 ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். அவ்வாறு அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் மாநகராட்சியால் அகற்றப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.