சென்னை: சென்ட்ரலில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டு வரும் சென்ட்ரல் ஸ்கொயர் முதற்கட்ட பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவுபெறும் என மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மெட்ரோ நிறுவனம் சார்பில் ரூ.400 கோடியில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே சென்ட்ரல் ஸ்கொயர் கட்டப்படுகிறது. சென்ட்ரல் ஸ்கொயர் திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் நேரில் ஆய்வு செய்தார். சென்டர் ஸ்கொயர் திட்டப்பணிகள் 2022க்குள் முழுமையாக நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்கட்டமாக சென்ட்ரல் விக்டோரியாக ஹால் பகுதியில் பயணிகள் ஓய்வு எடுத்துவிட்டு, பேருந்து அல்லது புறநகர் ரயில்களுக்கு செல்லும் வகையிலான வசதிகள் நிறைவுபெறும் வகையில் உள்ளது. இது இன்னும் 15 நாட்களுக்குள் முழுமை பெறும் என்று மெட்ரோ ரயில்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி,  சென்ட்ரல் செல்லும் பயணிகள் நீண்ட தூரரயிலிலோ அல்லது புறநகர்ப் பகுதியிலோ வரும் பயணிகள், அந்த பகுதியில் அமைக்கப் பட்டுள்ள எழில் கொஞ்சும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபகுதியில் ஓய்வெடுத்துவிட்டு செல்லலாம். அதற்காக  கான்கிரீட் பெஞ்சுகள் போடப்பட்டு உள்ளன. தரைகள் புல்வெளிகளாக மாற்றப்பட்டு உள்ளதுடன, அழகிய மரங்களும் நரப்பட்டு உள்ளன.  பயணிகள் தங்களது உடமைகளுடன்  சிறிது நேரம் ஓய்வெடுத்து, பயணத்தைத் தொடரும் வகையில், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மூர் மார்க்கெட் வளாகம் முன்புறம் அமைக்கப்பட்டு வந்த பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

செட்ட்ரல் ஸ்கொயரில்,  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள “டைம்ஸ் ஸ்கொயர்”, லண்டனில் உள்ள “டிராபல்கர் ஸ்கொயர்” போன்று சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே, “சென்ட்ரல் ஸ்கொயர்” அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில்,  20 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரம் ரூ.400 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. இந்த இரட்டை கோபுரம் 60 மீட்டர் உயரம் கொண்டதாகவும், அதில் பல்வேறு வசதிகள் நிரம்பியதாகவும் அமையும். இதில் பயணிகள் ஓய்வு எடுக்கும் அறைகள், கழிவறைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் நிரம்பியதாக ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், இங்கிருந்து சென்னையில் பிறபகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து இருக்கும்படியான இடமும் அமைக்கப்படும். மேலும், இந்த கட்டிடத்தில் உணவகங்கள், கடைகள் போன்றவைகளும் உருவாக்கப்படும். சென்ட்ரல் ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், புறநகர் ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தேவையான வசதிகள் இந்த இரட்டை கோபுரத்தில் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது..

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரிப்பன் மாளிகை வரை, ரிப்பன் மாளிகைக்கு எதிர்புறம் உள்ள காலியிடம் ஆகியவை விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இந்த சென்ட்ரல் ஸ்கொயரில் அடித்தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடமும் உருவாக்கப்பட உள்ளது. ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால் ஆகியவற்றுக்கு எதிர்புறம் இருக்கும் நிலப்பகுதிகளில் பயணிகள் நடை பாதைக்காகவும், அமரும் பகுதியாகவும் மாற்றப்பட உள்ளது. இந்த கட்டிடங்களுக்கு பின்புறம் இருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதி, பசுமையான பகுதியாகவும் மாற்ற திட்டமிடப்பட்டள்ளது.

இதற்கான பணிகள் கொரோனா காலத்தில் தடை பெற்றிருந்த நிலையில், மீண்டும்  கடந்த 6 மாதங்களாக விறுவிறுப்பாக  நடைபெற்று வரு கிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது, பயணிகள் ஓய்வெடுப்பதற்கான பகுதிகள் டிசம்பர் 2021 இறுதிக்குள் நிறைவடையும்” என்று CMRL அதிகாரி  தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே இதுபோன்ற பணிகள்  ரிப்பன் பில்டிங் முன்பும் முடிவடைந்த நிலையில், தற்போது,  “ராஜா முத்தையா சாலையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை ரிப்பன் கட்டிடங்கள் மற்றும் விக்டோரியா ஹால் வரை இயற்கையை ரசிக்கும் வகையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், சென்ட்ரல்  சதுக்கத்தின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்ட மற்ற பணிகள் மூன்று-நிலை நிலத்தடி பார்க்கிங் இடமும் தயாராகி வருகிறது. இதில், கிட்டத்தட்ட 800 கார்கள் பார்க்கிங் செய்ய முடியும் என்றும்,  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் ஈவினிங் பஜார் சாலையுடன் இணைக்கும்  நான்கு பாதசாரி சுரங்கப்பாதைகள் முடிவடையும் தருவாயில் உள்ளன என்றும் மெட்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், திட்டத்தின் அடித்தபடியாக, மத்திய பிளாசா கட்டிடம் தரையில் இருந்து 20 மாடிகள் உயரும், அதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும். பிளாசாவில் அலுவலக இடம், ஷாப்பிங் ஏரியா மற்றும் ஹோட்டல், பயணிகள் மற்றும் பேருந்து பணியாளர்களுக்கான காத்திருப்பு அறை ஆகியவை இருக்கும்  என்றும்,  பிளாசாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளுக்கு பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு முன்பக்கத்தில் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.