சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த கோகுல் என்பவரிடம் இந்திய ராணுவத்தில் பணி புரிவதாகக் கூறி மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருந்து கடை மற்றும் பரிசோதனை கூடம் நடத்தி வரும் கோகுலிடம் கடந்த வெள்ளியன்று தொலைபேசியில் இந்தியில் பேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவன் தான் இந்திய ராணுவத்தில் பணிபுரிவதாக கூறியுள்ளான்.

சில மருத்துவ பரிசோதனைகளைக் கூறி இந்த பரிசோதனைக்கு எவ்வளவு கட்டணம் என்று விசாரித்துள்ளான். தவிர தங்கள் குழுவில் பணிபுரியும் மொத்தம் 30 பேருக்கு இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளான்.

இதற்கான மொத்த கட்டணம் ரூ. 1,05,000 அதில் முன்பணமாக ரூ. 50,000 அனுப்புவதாகவும் ஒப்புக் கொண்டு பரிசோதனை நிலையத்தின் வங்கி கணக்கு விவரங்களைக் கேட்டிருக்கிறார்.

பின்னர், அந்த மோசடி நபர் அவதேஷ் குமார் என்ற பெயரில் மிலிட்டரி கான்டீன் ஐ.டி. மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை கோகுலின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனது நண்பரிடம் தெரிவித்த கோகுல், ஏற்கனவே பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் எர்ணாகுளம் ஆகிய நகரங்களில் இதேபோல் ஐ.டி. மற்றும் ஆதார் அட்டையைக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அந்த மோசடி எண்ணை பிளாக் செய்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தான் மோசடியில் இருந்து தப்பித்துள்ளதாக கூறிய அவர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது.